சித்திரை திருவிழா : மதுரையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்….

சித்திரை திருவிழா 2024 : அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் , தனது சகோதரி மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண புறப்பட்டார்.

உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றதுடன் கோலாகலமாக தொடங்கியது. தினம் ஒரு திருவிழாக் கோலம் பூண்டு மதுரை மாநகர் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. நேற்று முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஷ்வர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று திருக்கல்யாண கோலத்தில், பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் மதுரை முக்கிய வீதிகளில் வீதிவுலா வந்தனர். மதுரையில் கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் தேரில் மீனாட்சி அம்மனும், சுந்தேரஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதனை தொடர்ந்து, தற்போது, அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர், தனது சகோதரி மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரை நோக்கி புறப்பட்டார். அவரை மதுரை மாநகருக்குள் வரவேற்க எதிர்சேவை நிகழ்வு நிகழ்ந்தது. அப்போது பக்தர்கள் தோல் பைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆர்ப்பரித்தனர்.

தங்கை மீனாட்சி திருமணம் முடிந்த செய்தியறிந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை காலை 5.10 மணிக்கு நடைபெற உள்ளது. வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தோல் பைகளில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க உள்ளனர். ஆற்றில் இறங்குவதற்கு 2400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் மட்டுமே பீய்ச்சி அடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

நாளை (ஏப்ரல் 23) காலை 5.50 மணியளவில் ஆற்றில் இறங்கி காலை 6.10 மணி அளவில் சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தேரோட்ட நிகழ்வு கோலாகலமாக நடைபெறும்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.