அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா..!

பிரான்ஸில் அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்பு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், பிரான்ஸ்  பிரதமர் எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பிரதமராகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அவர் கடந்த மே 2022 இல் பிரதமரானார்.

அவர் பிரான்சின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மே 2022 இல் எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, புதிய பிரதமர் யார் என்பது தொடர்பான எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் வரை போர்ன் தினசரி உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்து கவனித்து வருவார் என்று ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.

இன்னும் 5 மாதங்களில் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதேசமயம், இம்மானுவேல் மக்ரோனின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. மக்ரோனின் பதவிக்காலத்தில் நிறைய எதிர்ப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்திருப்பதால், அமைச்சரவையில் மறுசீரமைப்பு அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இம்மானுவேல் மக்ரோனின் அரசு இயற்றிய குடியேற்ற சட்டங்கள், நகரங்களில் கலவரங்கள் மற்றும் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் தொடர்பாக பல எதிர்ப்புகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan