ரூ.1 லட்சம் வரை அபராதம்.! விதிகளை மீறினால் அபராதம் இரட்டிப்பு.!

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்மொழியப்பட்ட ஒலி மாசு விதிமுறைகளை மீறுவதால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஒலி மாசு விதிகள் குறித்து ஆராய உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.கார்க் தலைமையிலான கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் உத்தரவிட்டார். ஒலி மாசு மீறல்களுக்கு தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்த அபராதங்களை நாடு முழுவதும் அமல்படுத்த சட்ட உத்தரவுகளை பிறப்பிக்க என்ஜிடி (தேசிய பசுமை தீர்ப்பாயம்) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒலி மாசு விதிமுறைகளை மீறுவோருக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் பொது முகவரி அமைப்புகளை கைப்பற்றவும், ரூ.10,000 அபராதம் விதிக்கவும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) எடுத்துரைத்துள்ளது. அதில், 1000 கே.வி.ஏ க்கும் அதிகமான திறன் கொண்ட டீசல் ஜெனரேட்டர்களில் இருந்து வரும் ஒலி மாசுபாட்டிற்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

மேலும் கட்டுமான இடங்களில் அனுமதிக்கப்பட்ட சத்தத்திற்கு மேல் எழுப்பினால் உபகரணங்கள் பறிமுதல் செய்யவும், ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் பகலில் சத்தம் அளவு 55 டெசிபல் மற்றும் இரவில் 45 டெசிபல் என அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க கடும் அபராதம் விதிக்கவும் மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடித்ததற்காக ஒரு நபருக்கு ரூ.1,000 மற்றும் silence மண்டலத்தில் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படலாம். தொழில்துறை பகுதிகளில் சத்தம் அளவு பகலில் 75 டெசிபல் மற்றும் இரவில் 70 டெசிபல் வரை இருக்கலாம். மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற சத்தம் தடைசெய்யப்பட்ட பகுதிகள் பகலில் 50 டெசிபல் மற்றும் இரவில் 40 டெசிபல் வரை அதிகமாக இருக்கலாம். பொது பேரணி அல்லது ஊர்வலத்தில் இதே குற்றத்திற்கான அபராதம் முறையே குடியிருப்பு மற்றும் silence மண்டலங்களுக்கு ரூ.10,000 மற்றும் ரூ.20,000 ஆகும்.

ஒரு நிலையான வளாகத்திற்குள் விதிகள் மீண்டும் மீறப்பட்டால் அபராதம் ரூ.20,000 ஆக இரட்டிப்பாகும். ஒரே தவறை இரண்டு முறைக்கு மேல் செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று சிபிசிபி தனது அறிக்கையில் எடுத்துரைத்துள்ளது. இதற்கான விதிகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்