#BREAKING :தந்தை, மகன் கொலை வழக்கு – 5 போலீசாரிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ

தந்தை, மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது. இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

எனவே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், சிசிடிவி காட்சிகள், உள்ளிட்டவையை சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி ஒப்படைத்தது. இதனால் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த  விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேரை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.அதன்படி சிபிஐ  போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றது . சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெற்றது சிபிஐ. இன்று மாலை 5 போலீசாரை நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.