தந்தை-மகன் உயிரிழப்பு.. “இனி ஒரு நொடியும் வீணாகக் கூடாது”- நீதிபதிகள்!

கோவில்பட்டி கிளைசிறையில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கில் “இனி ஒரு நொடியும் வீணாகக் கூடாது” என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி, தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையானது, நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்பொழுது நீதிமன்றம், இது அரசின் கொள்கை முடிவு எனவும், இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்பொழுது அரசு தரப்பில் மாஜிஸ்திரேட்டிடம் மன அழுத்தத்தில் காவலர்கள் தவறு செய்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தந்தை-மகன் உடலில் மோசமான காயங்கள் இருந்ததாகவும், சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிபிஐ விசாரணையை தொடங்கும் முன், வழக்குக்கான தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், நீதி கிடைக்கும் என ஜெயராஜின் குடும்பத்தினர் நம்பிவருவதாகவும் அந்த அமர்வில் தெரிவித்தனர்.

எனவே இந்த வழக்கில் ஒரு நொடிகூட வீணாகக் கூடாது எனவும், சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி இந்த வலக்கை விசாரிக்க இயலுமா? என இன்று மதியம் 12 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.