எல்லையில் உச்சகட்ட பதற்றம்: தீர்வு காண 5 அம்ச திட்டம்.! இந்திய – சீனா ஒப்புதல்.!

எல்லையில் நிலவும் அசாதாரண சூழலை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக லடாக் எல்லைப்பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.

இதையடுத்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இருதரப்பு தங்களது ராணுவ படைகளை குவித்து வருகின்றனர். கடந்த 4ம் தேதி மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றபோது, சீன ராணுவ அமைச்சர் வெய் பெங்கியை இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது, மோதல் பகுதிகளில் இருந்து தங்களது படைகளை முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் நடத்தினார். இதில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து பேசிய பின்னர் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எல்லையில் நிலவும் அசாதாரண சூழலை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி எல்லைப் பிரச்சினையை தீர்க்க 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் தற்போது நிலவும் சூழல், இருநாடுகளின் நலனுக்கும் உகந்தது அல்ல என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும், எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்