தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு…!

தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வாங்கனி ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்தில் கண்பார்வை தெரியாத பெண் ஒருவர்,தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்தப் பெண்ணின் குழந்தை, திடீரென்று கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதே தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.பார்வை தெரியாததனால்,குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தப் பெண் சத்தமாக குரல் எழுப்பினார்.

அப்போது அங்கிருந்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே என்பவர் குழந்தை விழுந்ததைப் பார்த்தவுடன் வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழந்தையை தண்டவாளத்தில் இருந்து பிளாட்பாரத்துக்கு  தூக்கிவிட்டார்.பின்பு தானும் உடனே  பிளாட்பாரத்தின்மேலே ஏறிக்கொண்டார்.

மயூர் செல்கே, குழந்தையைக் காப்பாற்றிய சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இதனையடுத்து,ரயில் வேகமாக வரும் நேரத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மயூர் செயல்பட்ட விதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மயூர் ஷெல்கே இதுகுறித்து கூறுகையில்,”குழந்தை தண்டவாளத்தில் விழுந்ததைப் பார்த்ததும்,என்னால் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்று நம்பி வேகமாக ஓடினேன்.ரயில் வருவதற்குள் குழந்தையைத் தூக்கி பிளாட்பாரத்தில் போட்டுவிட்டு நானும் மேலே ஏறி தப்பித்துக்கொண்டேன்.பிறகுதான்,அந்த பெண்ணிற்கு கண்பார்வை இல்லாததனால்தான் குழந்தையை தவற விட்டுள்ளார் என்று புரிந்தது.

குழந்தையைக் காப்பாற்றியதனால் அந்த பெண் கண்ணீருடன் நன்றி சொன்னதை என்னால் மறக்கவே முடியாது.மேலும்,என்னுடன் வேலை செய்யும் ஊழியர்களும்,அதிகாரிகளும் எனது செயலைப் பாராட்டினார்கள்.உயிரைக் காப்பாற்றுவதை விட பெரிய விஷயம் எதுவும் இல்லை”,என்று கூறினார்.

இந்த நிலையில், மயூர் ஷெல்கேவை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல்,தனது ட்விட்டர் பக்கத்திலும் மயூரைப் பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார்.