ரிக்கி பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர்- பிராட் ஹாக் புகழாரம்.!

ரிக்கி பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி, உலக அணிகளுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்திருக்கிறது. அத்தகைய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலககோப்பைகளை இதுவரை 5 முறை வென்று வெற்றிகரமான அணியாக இருக்கிறது.

ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2 முறை 2003 மற்றும் 2007இல் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர் என்று கூறியிருக்கிறார்.

எம்.எஸ்.தோனியும், இந்தியாவிற்கு டி-20, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ்ட்ராபி என அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்திருக்கிறார். எண்ணற்ற சாதனைகளை படைத்த தோனி, இளம் கேப்டனாக 2007 இல் இந்தியாவிற்கு முதன்முதலாக நடந்த டி-20 உலகக்கோப்பையை வென்று உலகத்திற்கு தன்னை நிரூபித்து காட்டினார்.

இது குறித்து பிராட் ஹாக் கூறியதாவது, ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி இருவருமே சிறந்தவர்கள் தான், இருவருக்கும் தலைசிறந்த அணியே கிடைத்திருந்தது. மேலும் அவர்கள் தங்களது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இருவரும் தங்களது அணிக்கு செய்த சாதனைகள் விவரிக்க முடியாத அளவு அற்புதமானது.

இருவரையும் நீங்கள் பிரித்து பார்க்கமுடியாது, இருந்தாலும் பாண்டிங்கை விட தோனி, கிரிக்கெட் அரசியல்(இந்தியாவின்) குறித்து சிறப்பாகவே கையாண்டிருக்கிறார், அந்த வகையில் தோனி, பாண்டிங்கிற்கு முன்னிலையில் இருக்கிறார் என்று பிராட் ஹாக் கூறியுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment