,
INDvAUS

பழிக்கு பழி தீர்த்த இந்திய அணி ..! ஆஸி. அணியை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அபாரம்!

By

டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா அணியும், ஆஸ்திரேலியா அணியும் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி மைதானத்தில் வைத்து மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி, முதலில் விராட் கோலியின் (0 ரன்கள்) விக்கெட்டை இழந்தது.

முக்கியமான விக்கெட்டை இழந்தாலும் அதன்பிறகு களத்தில் இருந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக விளையாட தொடங்கினார். அவரது அதிரடியால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் கதிகலங்கி போனார்கள் என்றே கூறலாம்.

அவர் மட்டுமே இந்திய அணியில் 41 பந்துக்கு 92 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரை தாண்டி அனைத்து பேட்ஸ்மேன்களுமே ஓரளவுக்கு ரன்களை குவித்தனர். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தது.

அதன்பிறகு இமாலய இலக்கான 206 ரன்களை எடுக்க ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இந்திய அணியை போலவே முதலில் வார்னரின் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா அணி. அதன் பிறகு ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷும், டிராவிஸ் ஹெட்டும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர்.

நன்றாக விளையாடி கொண்டிருந்த மிட்சேல் மார்ஷ் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் மேக்ஸ்வெல்,  20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஸ்டோய்னிஸ்ஸும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஒரு முனையில் டிராவிஸ் ஹெட் மட்டும் தனி ஆளாக நின்று போராடி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தட்டுத்தடுமாறிய விளையாடிய ஹெட்டும் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்து    வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி பாதி உறுதியானது.

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா அணி போட்டியை கைவிட்டது என்றே கூறலாம். இதன் மூலம் 20 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதன் மூலம், 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி போட்டியை வென்றதோடு அரை இறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததற்கு இந்தியா அணி பழி தீர்த்தது என்றே கூறலாம்.

மேலும், வரும் 27-ம் தேதி அன்று இந்திய அணி, இங்கிலாந்து அணியை அரை இறுதி போட்டியில் எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023