வீடு, சாலைகளில் விரிசல்! பூமியில் புதைந்து வரும் உத்தராகண்ட் ஜோஷிமத் நகரம்!

உத்தராகண்ட் ஜோஷிமத் நகரத்தில் ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஏற்படும் நிலச்சரிவால் இந்த நகரமே பூமியில் மூழ்கும் என அதிர்ச்சி தகவல்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் என்ற நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 500க்கும் அதகிமான வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நகரமே மண்ணில் புதைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் இமயமலையின் அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இமயமலையின் 6150 அடி உயரத்தில் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த நகரம் ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது.

இமயமலையில் மலை ஏற செல்பவர்கள், பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை செய்பவர்கள், ஹேம்குந்த் சாஹிப் உள்ளிட்ட முக்கிய மதம் சார் சுற்றலா தலங்களுக்கு மக்கள் ஜோஷிமத் நகரத்தின் வழியே தான் சென்று வருகின்றனர். இந்திய ராணுவத்தின் மிக முக்கிய போக்குவரத்து இந்த ஜோஷிமத் வழியே நடந்து வருகிறது.

எனவே, ஜோஷிமத் கிராமத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் வசித்து வருவதாகவும், இங்கு அடிக்கடி நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கம் அபாயம் கொண்ட பகுதி என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜோஷிமத் பகுதியில் திடீரென அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடியும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வெளியேறியுள்ளனர். 500க்கும் அதிகமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஜோஷிமத் நகருக்கு சென்று, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, 500 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டு வாடகையாக மாதம் ரூ.4,000  முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த சமயத்தில் ஜோஷிமத் நகரம் அழிவின் விளிம்பில் இருப்பது தெரியவந்துள்ளது.

நிலச்சரிவில் இந்த நகரமே பூமியில் மூழ்கும் அபாயம் உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கு வசிப்பது மிகவும் ஆபத்தானது என ஜோஷிமத் நகரம் குறித்து விஞ்ஞானிகள், புவியியல் ஆர்வலர்கள் 50 ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜோஷிமத் நகரம், நிலச்சரிவின் இடிபாடுகளில் உருவாக்கப்பட்டதால், அதன் பாதிக்கப்படக்கூடிய அடித்தளங்கள் உட்பட பல காரணிகள் வீழ்ச்சியடைய வழிவகுத்தன. ஜோஷிமத் நில அதிர்வு மண்டலம் V இல் அமைந்துள்ளது, பூகம்பங்கள் மற்றும் நீர் ஊடுருவலுக்கு வாய்ப்பு உள்ளது. மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அழுத்தமும் அதிகரித்திருப்பதே இந்த அபாயத்திற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment