6 விதமான நோய்களால் காங்கிரஸ் கட்சி பாதிப்பு: மோடி..!

குற்றம், ஊழல், சாதியம், மதவாதம், முறையற்ற ஒப்பந்தங்கள் மற்றும் மோசமான கட்சி பண்பாடு என  6 விதமான நோய்களால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டிருப்பதாக மோடி விமர்சித்தார்.

40 ஆண்டுகளாக பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் நிற்கும் நிலையில், தான் பிரதமராக பதவி ஏற்கப்போவதாக ராகுல் காந்தி கூறியிருப்பது அகந்தையின் வெளிப்பாடு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பங்கேற்று பேசினார். அப்போது,   வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலே கர்நாடகாவின் எதிர்காலம் என்றார்.

காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்கள் மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், எங்கும் ஊழல் நிறைந்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த ஆறு நோய்களும்தான் கர்நாடகாவின் எதிர்காலத்தை அழிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  பணக்காரர்களுக்காக தாம் வேலைபார்ப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டுகிறது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, பணக்காரர்களுக்காகவா நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டி வருவதாக  கேள்வி எழுப்பினார். அடுத்த பிரதமர் தாமே எனக் கூறுவது அகந்தையின் வெளிப்பாடு என்றும், மூத்த தலைவர்களை ராகுல்காந்தி அவமரியாதை செய்வதாகவும் மோடி விமர்சித்தார்.

40 ஆண்டுகளாக காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை அவமதிப்பு செய்யும் வகையில் பிரதமர் பதவி ஏற்கப்போவதாக ராகுல் பேசியுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார். கர்நாடகாவின் பெருமையை காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் ஊழல் சிதைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் இருந்து வெளியேறும் காலம் வந்துவிட்டதாக கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment