நிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

நிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்துகொண்டே புயலாக உருமாறியது. அதனைதொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்துகொண்டே வந்து, தீவிர புயலாக மாறியது. இதனையடுத்து நேற்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் புதுச்சேரி இடையே புதுச்சேரியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனையடுத்து அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று, புதுச்சேரி அருகே நேற்று இரவு 11:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி, நள்ளிரவு 2:30 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. மேலும் இந்த புயல், வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்கிறதாகவும், 6 மணிநேரத்தில் மேலும் வலுவிழந்து, புயலாக வலுவிழக்கும். இதனால் வட தமிழகத்தில் மழை தொடரும் எனவும், காற்று சற்று வேகமாக வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிகர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், விடிந்தபின் அவையனைத்தும் தெரியவரும். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், புயல் தொடங்கியது முதல் அரசுக்கு மக்கள் 100 சதவித ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக கூறினார். மேலும் பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் அனைத்தும் தொடரும் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, நிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர், பயிர் சேதத்திற்கு காப்பீடு, இழப்பீடு பேரிடர் மேலாண்மை விதிகளுக்கு உட்பட்டு நிவாரணத் தொகை வழங்கபடும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த புயல் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், புயல் கால அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி மாநில அளவில் அவசர உதவி எண் 1070 என்றும், மாவட்ட அளவில் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது