டெல்லியில் உச்சத்தை அடைந்த கொரோனா-எய்ம்ஸ் இயக்குநர்.!

டெல்லி எய்ம்ஸ் இயக்குநரான டாக்டர் ரன்தீப் குலேரியா டெல்லியின் கொரோனா தாக்கம் உச்சத்தில் எட்டியதாக அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதுவரை கொரோனாவால் 1,22,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநரான டாக்டர் ரன்தீப் குலேரியா கொரோனா தடுப்பூசியான கொவாக்ஸினின் மனிதனில் சோதனை செய்வது குறித்து பேசுகையில், இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்வதற்காக 12,125 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 18 முதல் 55 வயதுடைய 375 பேருக்கு முதலில் பரிசோதனை செய்யப்படும் என்றும், அதற்கு அடுத்தக்கட்டமே 12 முதல் 65 வயதுடைய 750 பேர் மீது சோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லியில் கொரோனாவின் தாக்கம் குறித்து கூறிய போது, டெல்லியின் ஒரு சில பகுதிகளில் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்துள்ளது என்றும், சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவை இன்னும் சில தினங்களில் உச்சத்தை அடையும் என்றும் கூறியுள்ளார். செப்டம்பர் மாத இடையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உச்ச நிலையை அடையும் என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளை வல்லுநர்கள் கணித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு தான் என்று தெரிவித்துள்ளார்.