உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி.? முதலமைச்சர் விளக்கம்.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இம்மாத இறுதியில் சுமார் 15 நாட்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார். இந்த முறை ஸ்பெயின் , அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சமயத்தில் முதல்வரின் முக்கிய பொறுப்புகளை கவனிக்க அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என வதந்திகள் பரவி வந்தன. இந்த செய்தி குறித்து முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அனைத்து அமைச்சர்களுக்கும் துணையாக நாங்கள் செயல்படுகிறோம் என கிண்டலாக பதில் சொல்லி விட்டு சென்றார்.

அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவு..!

தற்போது இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு உள்ளார். அதில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி. வதந்திகளை பரப்பி பிழைப்பு நடத்துவோர் முதலில் என் உடல்நிலை குறித்து பொய்யான தகவல்களை பரப்பினர். அது எடுபடவில்லை என்றதும் தற்போது இவ்வாறான வதந்திகளை பரப்புகின்றனர் என்று குறிப்பிட்டார்.

மேலும் வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள மாநில உரிமை மீட்புக்கான இளைஞரணி மாநாட்டின் கவனத்தை திசை திருப்ப இம்மாதிரியான வதந்திகளை சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர். இவ்வாறான வதந்திகள் பல்வேறு விதமாக பரப்பப்படும். ஆனால், அதனை கவனத்தில் கொள்ளாமல் திமுக தொண்டர்கள் மாநில உரிமை மீட்புக்கான இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வேண்டும். அதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.

மேலும், இந்த முறை திமுக நிர்வாகிகள் அனைவரும் அவரவர் பகுதியில் உள்ள பொதுமக்களுடன் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ வேண்டும் என்றும், பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ வேண்டும் என்றும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து செய்தியில் திமுக தொண்டர்களுக்கு தெரிவித்து கொண்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.