குழந்தை திருமண விவகாரம்..! 1,800 பேருக்கு மேல் கைது..!

அசாமில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 1,800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாமில் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக நடைபெற்ற ஒடுக்குமுறையில் 1,800 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் அசாமில் 4,000 க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை திருமணச் சட்டத்தின் விதிகளை மீறுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

child marriages in Assam

இதனையடுத்து முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “பெண்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத மற்றும் கொடூரமான குற்றங்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற மனப்பான்மையுடன் செயல்படுமாறு அசாம் போலீசாரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும், “மாநிலத்தில் குழந்தை திருமண அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதில் அசாம் அரசு உறுதியாக உள்ளது. இதுவரை அசாம் காவல்துறை மாநிலம் முழுவதும் 4,004 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் மீதான நடவடிக்கை பிப்ரவரி மூன்றிலிருந்து தொடங்க இருப்பதால் இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட டீன் ஏஜ் (Teenage) பெண்களை திருமணம் செய்த ஆண்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அசாம் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

child marriages in Assam 2

தற்பொழுது ஒடுக்குமுறையின் முதற்கட்ட கைது நடவடிக்கையில் அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 1,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதால் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment