ஓய்வின்றி உழைப்பு… விரைவில் நிலைமை சீரடையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியினர் மீண்டு வர இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. சென்னை மத்திய பகுதிகளில் நிலைமை பெருமளவு சீரடைந்தாலும், சென்னை புறநகர் பகுதியில் இன்னும் நிலைமை சீரடையவில்லை.

ஒவ்வொரு பகுதியாக தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு படையினர், தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து வருகிறார்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு.! தமிழக அரசின் 5060 கோடி ரூபாய் கோரிக்கை.! மத்திய அமைச்சர் தமிழகம் வருகை.!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு அமைச்சர்களை நியமித்து மீட்பு பணிகளை முதல்வர் தீவிரப்படுத்தியுள்ளார். நேற்று கொளத்தூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது வெள்ள மீட்பு பணிகளை முதல்வர் பார்வையிட்டார்.

மீட்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், ” கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் மிக்ஜாம் புயல் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்.” என பதிவிட்டுள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.