Chandrayaan-3: விக்ரம் லேண்டரை மீண்டும் மேல் எழுப்பி சோதனை..! வெற்றிகரமாக நிறைவேற்றம்.!

இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதைகளை சுற்றி, கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

விக்ரம் லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட்பகுதியில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவின் ஒரு நாள் (பூமியின் 14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. பிரக்யான் ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்வு தகவல், புகைப்படம், அதன் நிலைப்பாடு என இஸ்ரோ சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்தது.

அண்மையில் வெளியிட்ட தகவலின் படி, நிலவின் தென் துருவப் பகுதியில் பிளாஸ்மா இருப்பதை முதன்முதலில் பிரக்யான் ரோவர் கண்டறிந்து அளவீடு செய்திருந்தது. நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ள தகவல் உட்பட, பல்வேறு தகவல்களை வெளியிட்ட ரோவரின் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதன்படி, பிரக்யான் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்து மீண்டும் சூரிய உதயத்தில் ரோவர் தனது பணியை துவங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சந்திரயான்-3 லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி, அதனை வெற்றிகரமாக தரையிறங்கி இஸ்ரோ சோதனை செய்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ கூறியிருப்பதாவது, “விக்ரம் மீண்டும் நிலவின் மீது மெதுவாக தரையிறங்கியுள்ளது. விக்ரம் லேண்டர் அதன் பணி நோக்கம் இது வெற்றிகரமாக ஒரு ஹாப் பரிசோதனைக்கு உட்பட்டது. எங்கள் கட்டளையின் பேரில், லேண்டர் அதன் இயந்திரங்களைச் செயற்படச்செய்து, எதிர்பார்த்தபடி தன்னை சுமார் 40 செமீ உயர்த்திற்கு மேலே தூக்கி, 30 – 40 செமீ தொலைவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.”

“இதற்கான முக்கியத்துவம் என்னவென்றால், இந்த ‘கிக்-ஸ்டார்ட்’ எதிர்கால மாதிரி திரும்பவும் மனித பணிகளையும் உற்சாகப்படுத்துகிறது! அனைத்து அமைப்புகளும் சரியாக செயல்படுகின்றன மற்றும் ஆரோக்கியமாக உள்ளன. லேண்டரில் உள்ள ராம்ப், ChaSTE மற்றும் ILSA ஆகிய ஆய்வு கருவிகள் தரையிறங்கிய பின்னர் மீண்டும் சோதனை செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.