#BREAKING: துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல்! – அதிமுக, பாஜக எதிர்ப்பு!

பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.

இந்த சமயத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இதன்பின்னர், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது. இது மக்களாட்சியின் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது.

துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், மாநில அரசு தான் துணைவேந்தரை நியமிக்கிறது. இதே நிலை தான் கர்நாடகம், தெலங்கானாவிலும் உள்ளது. துணைவேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும் என்றும் ஆளுநர் – அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்ய மசோதாவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டதிருத்த மசோதாவிற்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால் பாஜக எதிர்க்கிறது என்றும் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும்போது அரசியல் உள்நோக்கம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்