#BREAKING: இனி நவ.1 உள்ளாட்சி தினம்.. ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக ஆட்சி அமைக்கும்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.

இதனால் இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படும் என தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டது. மேலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22 தண்ணீர் தினம் கொண்டாடப்படும் என்றும் நவம்பர் 1 உள்ளிட்ட ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு 4 முறை ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் நிலையில், இனி தண்ணீர் தினம் மார்ச் 22 மற்றும் நவ 1 ஆகிய தினங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.

1,19,000 ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்றும் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அரசின் அறிவிப்பால் 1.10 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனடைவர் என கூறினார். அமர்வுப்படி தொகை மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கு 5 மடங்கு உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சிறந்த ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது 2022ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்