#BREAKING: ஜெயலிலதா மரணத்தில் மர்மங்கள்.. 4 பேர் குற்றம் செய்தவர்கள்… வெளியான திடுக்கிடும் அறிக்கை.!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த அறுமுகசாமியின் ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பேரவையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் அமளி காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விசாரணை அறிக்கையில், 2012-ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக உறவு இல்லை என ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா உள்பட 4 பேர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, விகே,சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் என அறிக்கையில் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதாக ஆணையம் கூறியுள்ளது. சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும், ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.

டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் அஞ்சியோவுக்கு பரிந்துரைத்தும் ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை ஏன் அது நடக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சசிகலா உறவினர்களால் அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட டாக்டர் சமீன் சர்மாவை ஏற்பாடு செய்தவர் யார் என்ற விவரம் கடைசி வரை கூறப்படவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர், ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார், ஆனால் அது நடக்கவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விசாரணை அறிக்கையில், குறிப்பாக ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிச.5-ஆம் தேதி இரவு 11.30 மணி என மருத்துவமனை கூறும் நிலையில், 4-ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கே இறந்து விட்டார் என சாட்சியம் தெளிவுப்படுத்துகிறது என்றும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் எனவும் அறிக்கையில் தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில், பல்வேறு முரணான மற்றும் மர்மமான தகவல் உள்ளதால், இதுதொடர்பான விசாரணைக்கு இன்று தமிழக அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment