#BREAKING: சந்திரயான்-3 திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும் – இஸ்ரோ

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை மாலை நிலவில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வை இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், சாதகமான சூழல் இல்லை என்றால் லேண்டர் நிலவில் தரையிறங்குவது தாமதமாக வாய்ப்பு உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்து கணினிகளும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், சந்திரயான் 3 செயல்பாடு திருப்திகரமாக உள்ளது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

எனவே, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை நாளை மாலை 5.20 மணி முதல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், நிலவில் இருந்து 70 கிமீ உயரத்தில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்து புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டர் எடுத்துள்ள இந்த புதிய புகைப்படங்கள் தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இஸ்ரோ இணையதளம் (https://www.isro.gov.in/), யூடியூப், இஸ்ரோவின் முகநூல் பக்கம் (https://www.facebook.com/ISRO/) மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும். இதனிடையே, சாதகமான சூழல் இல்லாவிட்டால் சந்திரயான் -3 தரையிறங்குவது ஆக.27க்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், திட்டமிட்டபடி நாளை மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்