மதிப்பிற்குரிய மங்கைகளின் மனக்குமுறல் ..!

0
101
தயைகூர்ந்து எங்களின் மீது
உங்களின் சுதந்திர தின வாழ்த்தின் 
வன்மத்தை தெளிக்காதிருப்பீர்களாக..!
அவ்வார்த்தை ஒரு கொடிய அமிலமாய்
எங்களை சுடுவதை
உங்களால் உணரமுடிகிறதா…?
  
பிச்சையெடுக்கும் எங்கள் கரங்களால்
பதில் வாழ்த்துக்களை சொல்லி
உங்கள் கரங்களோடு
எங்கள் கரத்தை குலுக்க இயலாது..!
சுதந்திர தின வாழ்த்தையுரைக்கும்
உங்கள் குரலுக்கு
பாலியல் தொழிலுக்கு உங்களை
கூவி இசைக்கும்
எங்களின் குரலால்
வாழ்த்திசைக்க இயலாது….!
குடும்ப தீண்டாமை
சமூக தீண்டாமை
அரச தீண்டாமையெனும்
முவ்வாளுமையில் மூழ்கிக் கிடக்கும்
எம் பாலினத்தோரால்
அம்மூவர்ண கொடியை உயர்த்தி
பல்லிலித்திட இயலாது..!
உங்களைப் போன்று இல்லாத எங்களால்….
இத்தேசத்தின் அனைத்து திசைகளிலும்
வாழ்விழந்த எங்களால்….
உங்களின் வாழ்த்தின் வன்மத்தை
உள்வாங்கிட இயலாது…!
ஆம்…!
உங்கள் வாழ்த்தில்
கொடிய வன்மம் ஒளிந்திருக்கிறது..!
எங்களை
பொட்டை
ஒம்போது
உஸ்..
அலி
எனும் அவ்வன்மத்தை விட
எங்களிடம் நீங்கள் கூறும்
சுதந்திர தின வாழ்த்தின் வன்மம்
மிகக் கொடியது..!
ஆகவே நண்பர்களே….
கொடிய அமிலமாம்
உங்களின் சுதந்திர தின
வாழ்த்தின் வன்மத்தை
எங்கள் மீது நீங்கள் தெளிக்காதிருப்பீர்களாக…!
~கிரேஸ் பானு~

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here