மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன்…!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியபோக்கே காரணம் என கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாநகராட்சிக்கு உற்பட்ட 52 வது வார்டு வீரபாண்டி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சதாசிவம்,பவித்ரா.
இவர்களுக்கு ரித்தீஷ் என்ற 5 வயது மகன் இருந்தான். இந்நிலையில் ரித்தீஷ் கடந்த ஒருவார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து சதாசிவம் ரித்தீஷை தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி அனுமதித்துள்ளார். 
சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காய்ச்சல் அதிகம் உள்ளதால் அட்மிட் செய்ய கூறியுள்ளனர்.அதனை தொடர்ந்து ரித்தீஷ் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இன்று காய்ச்சல் அதிகமாக இருந்ததால் பெற்றோர் காலை மருத்துவமனைக்கு  மீண்டும் அழைத்து சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்தான். 
இதைபார்த்த பெற்றோர்கள் தங்கள் மகனின் இறப்புக்கு மருத்துவர்களின் அலட்சிய போக்கே காரணம் என கூறி உறவினர்களுடன் சேர்ந்து மருத்துவமனையின் முன்பு உள்ள தாராபுரம் பிரதான சாலையில் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். 

Leave a Comment