“பித்தலாட்டமா பன்ற, தொலைச்சிருவேன் ஜாக்கிரதை” – இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய காஞ்சிபுர கலெக்டர் !

காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலைய தரிசனத்தில் பாஸ் இல்லாமல் பக்தர்களை அனுப்பியதாக அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கோபத்துடன் திட்டும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது.

அத்திவரத்தரை நாள்தோறும் தரிசிக்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசிக்க வரும்  பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசிக்க வசதியாக பாஸ் மூலம் சிறப்பு தரிசனமும் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பாஸ் இருந்தால் மட்டுமே சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்க படும் சூழலில் பாஸ் இல்லாமல் வரும் பக்தர்களிடம் காவல்துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிக்க படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்யும் போது பாஸ் இல்லாமல் வரும் சிலரை காவல் ஆய்வாளர் ஒருவர் அழைத்துச் செல்வதை கண்டார்.

 

உடனடியாக அவர் அருகில் சென்ற ஆட்சியர், ஆய்வாளரை பார்த்து “எந்த ஸ்டேஷன் நீ பித்தலாட்டமா பன்ற” “தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை”  “நீ எல்லாம் போலீசா” “என்ன செக் பண்ணி அனுப்ச” “முக்கியமான விஐபி எல்லாம் நிக்காங்க நீ உன் இஷ்டத்துக்கு பண்ணுவாயா” என்று கடும் ஆவேசத்துடன் லெப்ட் ரைட் வாங்கினார். மேலும், ஐஜி நம்பர் எங்க இவன நாளைக்கே சஸ்பெண்ட் செய்யணும் என்றும் கூறி இருக்கிறார்.

 

பக்தர்கள் சூழ்ந்து இருக்கும் போது இவர் பேசி இருந்ததால், அங்கு இருந்தவர்கள் தங்கள் போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிற்து.