#BIG BREAKING: சூரியனை நோக்கி சீறி பாய்ந்த ஆதித்யா..! விண்வெளியில் மேலும் ஓர் வெற்றிக்கொடி.!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 என்ற விண்கலமானது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயுட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தங்களது அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் பணிக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் “ஆதித்யா எல்-1” என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் ஆனது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை செலுத்துவதற்கான 24 மணிநேர கவுன்ட் டவுன் நேற்றுத் தொடங்கப்பட்ட நிலையில், தற்பொழுது ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் புவியின் தாழ்வு வட்டப்பாதையை சென்றடைவதற்கு 72 நிமிடங்கள் (1 மணி நேரம் 12 நிமிடங்கள்) ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு ராக்கெட்டில் இருக்கக்கூடிய அடுக்குகள் கழற்றிவிடப்பட்டு மேற்பகுதியில் இருக்கக்கூடிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஆனது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றவிடப்படும்.

இதன்பிறகு, ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையை அதிகரிக்கும் பணி நடைபெறும். ஆதித்யா எல்-1 விண்கலமானது பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும். இந்த 16 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மெதுவாக அதிகரிக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும்.

இதன்பிறகு, பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் (15 லட்சம் கி.மீ) தொலைவில் இருக்கும், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) வைக்கப்படும். இந்த முழு திட்டமும் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தவுடன் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகளும் செயல்படத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எல்-1 புள்ளியில் வைக்கப்படும் ஆதித்யா எல்-1 விண்கலத்தில் இருக்கும் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கின்றன, மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ரேஞ்ச் புள்ளி எல்-1 -ஐ சுற்றி இருக்கக்கூடிய துகள்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன.

ரிமோட் சென்சிங் பேலோடுகள்:

விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) என்பது சூரியனின் கரோனா அடுக்கு மற்றும் கரோனாவிலிருந்து சூரியக் காற்றில் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலத்தின் வெளியீடுகளைப் பற்றி ஆய்வு செய்கிறது. இது ஒவ்வொரு நாளும் சூரியனின் 1,440 படங்களை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் இந்த பேலோடை உருவாக்கியுள்ளது.

சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) ஆனது, சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதா (UV) கதிர்களின் உமிழ்வுகளை ஆய்வு செய்து, கரோனா மற்றும் மற்றும் குரோமோஸ்பியரை புற ஊதா உமிழ்வுக்கு அருகில் படம்பிடித்து, புற ஊதா கதிர்வீச்சு மாறுபாடுகளை அளவிடுகிறது. புனேவில் உள்ள வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பேலோட் உருவாக்கப்பட்டுள்ளது.

சோலார் லோ எனர்ஜி எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (SoLEXS) மற்றும் ஹை எனர்ஜி எல்1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (HEL1OS) ஆகியவை சூரியனிலிருந்து எக்ஸ்-ரே கதிர்களை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பேலோடுகளும் பெங்களூரில் உள்ள யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்-சிட்டு பேலோடுகள்:

ஆதித்யா சோலார் விண்ட் பார்ட்டிகள் எக்ஸ்பெரிமெண்ட் (ASPEX) மற்றும் ஆதித்யாவிற்கான பிளாஸ்மா அனலைசர் தொகுப்பு (PAPA) ஆகியவை சூரிய காற்று மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் அவற்றின் ஆற்றல் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன.

ASPEX ஆனது அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. PAPA ஆனது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

மேக்னடோமீட்டர் பேலோட் ஆனது எல்-1 புள்ளியில் இருக்கும் இரண்டு கிரகங்களுக்கு இடையேயான காந்தப்புலங்களை அளவிடும் திறன் கொண்டது. இது பெங்களூருவில் உள்ள எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்களுக்கான ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.