#Budget 2022: இந்தாண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம்- அடுத்தாண்டு பயன்பாட்டிற்கு வரும் 5G..!

5ஜி அலைக்கற்றை ஏலம் இந்தாண்டுக்குள் நடத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

தனது மத்திய பட்ஜெட் 2022-23 விளக்கக்காட்சியின் போது, தனியார் நிறுவனங்களால் 2022-23க்குள் நாட்டில் 5G நெட்வொர்க்கை வெளியிட 2022 இல் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும் என்று கூறினார்.

2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும், 5G மொபைல் சேவைகளை தொடங்குவதற்கு தேவையான 5ஜி ஸ்பெக்ட்ரம் 2022-23 க்குள் ஏலம் விடப்படும் என்று அவர் கூறினார்.

இருப்பினும் பொதுமக்கள் 5G ஐப் பயன்படுத்த அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு மே வரை டெலிகாம் நிறுவனங்கள் சோதனைக்கு அனுமதி பெற்றுள்ளன.  நாட்டின் அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வெவ்வேறு நகரங்களில் 5G சோதனைகளை செய்து வருகின்றன.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் மும்பை, புனே, குஜராத், டெல்லி மற்றும் குருகிராம் போன்ற நகரங்களில் தங்கள் 5ஜி நெட்வொர்க்குகளை சோதனை செய்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் 1000 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக சமீபத்தில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan