சோகம்…! அசாமின் ‘பெண் சிங்கம்’ என்று அழைக்கப்படும் காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு.!

அசாமின் ‘பெண் சிங்கம்’ என பலராலும் புகழப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜுன்மோஜி ரபா சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநில காவல்துறையின் பெண் சப்-இன்ஸ்பெக்டர் நேற்று அதிகாலை நாகோன் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் உயிரிழந்தார். பாலிவுட் போலீஸ் படங்களுக்குப் பிறகு, ‘பெண் சிங்கம்’ அல்லது ‘தபாங் காப்’ என்று பலராலும் அழைக்கப்படும் ஜுன்மோனி ரபா, சீருடையில் இல்லாமல் தனது காரில் தனியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது, கலியாபோர் சப்-டிவிஷனின் ஜகலபந்தா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சருபுகியா கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலை 2:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகவும், இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில், இந்த விபத்து தொடர்பாக, உத்தரபிரதேசத்தின் பதிவு எண்ணைக் கொண்ட கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி விட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது, அவரை தேடும் வேட்டையில் அசாம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.