கொரோனா பரவல் எதிரொலி;சென்னை ஏர்போட்டில் 42 விமானங்கள் ரத்து..!

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வருகை அதிக அளவில் குறைந்துள்ளது.இதனால்,42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் கோவை, சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் போன்ற சில மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து,சென்னையில் இருந்து அந்தமான்,மணிப்பூர்,ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் செல்ல கொரோனா பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த காரணத்தினால்,சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வருகை பெரும் அளவில் குறைந்துள்ளது.எனவே,போதிய பயணிகள் இல்லாததால் மும்பை, டெல்லி,கொச்சி,ஹைதராபாத், அகமதாபாத், அந்தமான்,இந்தூர்,புவனேஸ்வர் மற்றும் மதுரை உள்ளிட்ட 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதில் 21 விமானங்கள் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு புறப்படுபவை.மேலும்,21 விமானங்கள் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவை.

இதனையடுத்து,பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.