மது விற்பனையால் தொடரும் குற்றச் சம்பவங்கள்! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சரவணன் என்ற விவசாயிக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. இந்த விவசாய நிலத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இதனை பார்த்த சரவணன், இங்கு மது அருந்தாதீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் கையில் வைத்து இருந்த கத்தியை வைத்து சரவணனை குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், தனது விவசாய நிலத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்து பேரில் இரண்டு சிறார்களும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.

தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால், கொலைக் குற்றச் சம்பவங்கள் தொடர்கின்றன.உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை செய்யும் திமுக அரசு, குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், கும்பலாக அமர்ந்து மது அருந்துவதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானால் என்ன, சாராய ஆலைகள் நடத்தும் திமுகவினருக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த ஆபத்தான போக்கு.

தங்கள் கட்சியினருக்கு வருமானம் என்ற ஒரே நோக்கத்திற்காக, மது விற்பனையால் தொடரும் குற்றச் சம்பவங்களையும், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும், தடுக்க திமுக அரசு தவறினால், இதனால் ஏற்படும் விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.