உயிருடன் இருக்கும் அல்கொய்தா தலைவர்- அய்மன் அல்-ஜவாஹிரி..!

உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி,நேற்று முன்தினம் வீடியோவில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி அல்-கொய்தா பயங்கரவாதிகள், இரட்டை கோபுரத்தின் மீதும்,அமெரிக்க ராணுவ தலை மையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தியதில், சுமார் 3000 பேர் வரை உயிரிழந்தனர்.‌

இதனையடுத்து,இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் சுட்டு கொன்றது.

இதனால்,அல்-கொய்தா அமைப்பின் தலைவராக அய்மன் அல்-ஜவாஹிரி பொறுப் பேற்றார்.உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியாயின.எனினும் அவரது இறப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில்,இரட்டை கோபுர தாக்குதலின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில்,இறந்ததாக கூறப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரி  பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில்,அவர் முழு உடல்நலத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும்,அந்த வீடியோவில் அவர் ’ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக் கப்படாது’ எனவும்,கடந்த ஜனவரி மாதம் சிரியாவில் நடந்த ரஷ்ய படைகள் மீதான தாக்குதலுக்கு அல்கொய்தா அமைப்பினருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.ஆனால்,தலிபான்கள் நிலை குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.