ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1000 ஆக அதிகரிப்பு!!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 12:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.1 ஆகவும், மதியம் 12:19 மணிக்கு ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதியம் 12:42 மணிக்கு  6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இருந்தாலும், நேற்று 100 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபை 320 பேர் இறந்ததாக முதற்கட்ட புள்ளிவிவரத்தைக் கொடுத்தது.

பின்னர் அந்த எண்ணிக்கை இன்னும் சரிபார்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று (8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகியதாகவும், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 3000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து காணப்பட்டனர். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.