கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்கள் சேர்க்கை தொடங்க வேண்டும்-அமைச்சர் பொன்முடி..!

தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்களின் சேர்க்கை தொடங்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இன்று காலை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கலந்தாலோசித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது போன்று நடக்கக்கூடாது என கூறினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு பிறகே மாணவர்களின் சேர்க்கையை தொடங்க வேண்டும். ஜூலை 31 ஆம் தேதிக்குள் மாநில பாடத்திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ யில் பயின்ற +2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், பொறியியல் கல்லூரிகளில் வழக்கம் போல் இருக்கும் சேர்க்கை முறையே இப்போதும் தொடரும்.

பெருந்தொற்று காலம் காரணமாக கல்லூரி மாணவர்களின் சேர்க்கை தாமதமாக தொடங்கப்படுவதாக கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து கல்லூரிகளில் பயிலும் முதல் தலைமுறை மாணவர்களுக்கான சலுகைகள் தொடரும் எனவும், கல்லூரிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வை ரத்து செய்துள்ளதாகவும், விரைவில் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.