“நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்” – மன்னிப்பு கடிதம் எழுதிய நடிகர் சித்தார்த்!

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அவர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிப் பகுதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக கூறி,அவர் பாதியிலேயே தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார்.

இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக மத்திய உள்துறை அமைச்சகம் கருதியதையடுத்து,பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசு,மத்திய உள்துறை அமைச்சகம்,உச்ச நீதிமன்றம் ஆகியவை தனித்தனியாக குழுக்களை அமைத்து விசாரித்து வருகின்றன.

பஞ்சாப் சென்ற பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக, ஆளும் பஞ்சாப் காங்கிரஸுக்கு எதிராக பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.ஆனால்,இது பாஜகவின் அரசியல் காரணங்களில் ஒன்று என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையில்,கடந்த சில தினங்களுக்கு முன்பு,இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில்  பிரதமரின் மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் அராஜகவாதிகள் என கூறி #BharatStandsWithModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில்,நடிகர் சித்தார்த் அவரது ட்விட்டர் பக்கத்தில்,இறகுப்பந்து உலகின் சாம்பியன்,எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர்,கடவுளுக்கு நன்றி என்று தெரிவித்தார்.இதில் இறகுப் பந்தின் ஆங்கில வார்த்தையான “ஷட்டல் கார்க்” என்பதை ”Subtle Cock” என்று குறிப்பிட்டிருந்தார்.

சித்தார்த்தின் பதிவு சாய்னாவை இழிவுபடுத்துவதாக கண்டனம் எழுந்தது.அவருக்கு எதிராக பல தரப்பினர் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.சித்தார்த் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிர மாநில டிஜிபிக்கு புகார் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனிடையே, விமர்சனத்திற்கு பதிலளித்த சித்தார்த், “நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. “COCK & BULL” என்பதில் இருந்து தான் குறிப்பிட்டு அந்த கருத்தை பதிவிட்டேன்.ஆபாசம் மற்றும் யாரையும் அவமரியாதை பதிவு செய்ய வேண்டும் என்கிற எந்தவொரு உள்நோக்கமும் எனக்கு இல்லை என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில்,சாய்னாவிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார்.இது தொடர்பான,தனது மன்னிப்பு கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“அன்புள்ள சாய்னா,சில நாட்களுக்கு முன் உங்கள் ட்வீட் ஒன்றிற்கு பதிலடியாக நான் எழுதிய எனது முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபத்தால் பேசிய எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது.

ஜோக்கைப் பொறுத்தவரை.ஒரு ஜோக்கை விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல நகைச்சுவையாக இருக்க முடியாது.எனது நகைச்சுவைக்கு மன்னிக்கவும்.

எவ்வாறாயினும்,எனது வார்த்தை விளையாட்டு மற்றும் நகைச்சுவையானது அனைத்து தரப்பிலிருந்தும்  தீங்கிழைக்கும் நோக்கம் எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் வலியுறுத்த வேண்டும்.நான் ஒரு உறுதியான பெண்ணிய கூட்டாளி மற்றும் எனது ட்வீட்டில் பாலினம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும்,ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக இல்லை என்றும் நான் உறுதியளிக்கிறேன்.நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்,நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்”,என்று தெரிவித்துள்ளார்.