இரண்டாவது ரிக் இயந்திரம் துளையிடும் பணியை தொடங்கியது..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடுகாட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தற்போது 100 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ள சுர்ஜித்தை  மீட்கும் பணி 54 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து தீவிரமாக  நடைபெற்று வருகிறது.
பல முயற்சிகள் செய்து தோல்வியடைந்த நிலையில் தற்போது புதிய முயற்சியை  அதிகாரிகள் செய்துள்ளனர். அந்த ஆழ்துளை கிணறுக்கு அருகே சுரங்கம் போல ஒரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் எந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்றது. 15 அடிக்கு மேல் பாறை இருந்ததால் குழி தோண்டும் பணி தாமதமானது . இதனால் அதிக திறன் கொண்ட இரண்டாவது ரிக் இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்டது.
இரண்டாவது இயந்திரத்தில் உபகரணங்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது முடிவடைந்து .அந்த இரண்டாவது ரிக் இயந்திரம் துளையிடும் பணியை தொடங்கியுள்ளது. ஏற்கனவே முதலில் துளையிட்டு வந்த முதல் ரிக் இயந்திரம் அப்புறப்படுத்தப்பட்டது. முதல் இயந்திரத்தை விட இரண்டாவது ரிக் இயந்திரம் மூன்று மடங்கு அதிக திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan