உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நவம்பர் 19 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக இன்று உருவானதாக கூறியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இதன் காரணமாக நவம்பர் 19 முதல் குறிப்பாக நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனிடையே, நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் தமிழ்நாடு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment