ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடலாமா வேண்டாமா ??
ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடாதீங்க’ என்பது டயட்டீஷியன்களும், டாக்டர்களும் அடிக்கடி சொல்கிற ஆலோசனைகளில் ஒன்று. இன்று அதிகரித்துவரும் நோய்களின் பின்னணியில் முக்கிய காரணியாகவும் துரித உணவுகள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.என்னென்ன காரணங்களால் ஃபாஸ்ட் ஃபுட் உடல்நலனுக்குக் கேடானது
‘‘இயந்திர வாழ்க்கையின் அதிவேகம் காரணமாக துரித உணவுகள் பயன்பாட்டுக்கு வந்தன. சமைப்பது எளிது, வித்தியாசமான சுவை, குறைவான நேரம் என்ற காரணங்களால் துரித உணவுகளுக்கு மக்கள் மாறிவிட்டார்கள். ஆனால், இவ்வகை துரித உணவுகளில் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன.உணவின் சுவையை கூட்ட கலக்கப்படும் ரசாயனங்கள் முதல், சமைக்கும் முறை வரையிலும் பல பிரச்னைகள் துரித உணவுகளில் இருக்கின்றன.
பீட்சா, பர்கர், நூடுல்ஸ் ஆகிய ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களான, மீன், முட்டை மற்றும் காய்கறிகள், சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் புளி, தக்காளி, பச்சை மிளகாய் கலவை போன்றவை பல நாட்களுக்கு முன்னரே, சமைக்கப்பட்டு, பல நாட்கள் வரை கெட்டுப்போகாத வண்ணம் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படுகின்றன.
இவ்வாறு உடல் நலத்துக்குக் கேடும் ஏற்படுத்தும் வகையில் சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் தீமைகள்தான் அதிகம். இவற்றில் எந்தவிதமான
ஊட்டச்சத்தும் கிடைப்பது இல்லை. அதற்குப் பதிலாக கலோரிகள்தான் ஏராளமாக உள்ளன. கலோரிகள் மட்டுமே அதிகமாக காணப்படுகிற துரித வகை உணவுப்பண்டங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
எனவே, ஒரு நாளாக இருந்தாலும் சரி, பல நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர் என யாராக இருந்தாலும் இதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். ஆனால், அதனை அன்றாட பழக்கமாக மாற்றும் போது பல உடல்நலக் கோளாறுகள் வரும்.
உச்சந்தலை முதல் அடிப்பாதம் வரை பாதிக்கப்படும். மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், Sleep Apnea ஏற்படும். அதாவது, நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து, சோர்வு உண்டாகும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறட்டை அதிகளவில் வெளிப்படும்.
இதயத்தில் கொழுப்பு படிவதால், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், கல்லீரலில் கொழுப்பு ஏராளமாக சேர்ந்து, எரிச்சல் உண்டாகி சுருங்கும் வாய்ப்பு உண்டு. மேலும் மலச்சிக்கல், எலும்புகள் பலவீனம் ஆதல், எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை தவிர, பெருங்குடலில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இன்று நமது வாழ்க்கை முறை உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கையாக உள்ளது. இதன் காரணமாகவும் அதிக கலோரிகளும், கொழுப்புகளும் கொண்ட ஃபாஸ்ட் ஃபுட்டைத் தவிர்க்க வேண்டும். எந்த உணவைச் சாப்பிட்டு வந்தாலும் உடற்பயிற்சிகள் செய்வதையும் பழக்கப்
படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.