தமிழகம் நீராதாரங்களுக்கு அண்டை மாநிலங்களை நம்பும் நிலை ?காரணம் என்ன ?

வீணாக நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி கேரளாவில்  கடலில் கலக்கும் பாண்டியாற்றின் குறுக்கே அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நீருக்காக பிற மாநிலங்களை எதிர்பார்க்காமல், சொந்த ஆற்று நீரை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவை பெரும்பாலும் அண்டை மாநிலங்களை நம்பியே உள்ளதால் தண்ணீர் தாவாவில் சிக்கி தமிழகம் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதே நேரத்தில் தமிழகத்தில் உருவாகும் சில சிற்றாறுகள் பிற மாநிலங்களை நோக்கி பேராறாக விரிந்து செல்கின்றன. இவற்றை தமிழகத்தை நோக்கி திருப்ப உதகையில் அணைகட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் பாண்டியாறு, ஓவேலி, கிளென்மார்கன், நாடுகாணி, தேவாலா பகுதிகளில் தோன்றும் சிற்றாறுகள் இரும்புப்பாலம் பகுதியில் பாண்டியாறு என்ற பெயரில் ஒரே ஆறாக பாய்கிறது. தமிழக நிலப்பரப்பில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்த பின்னர் கேரளாவில் புன்னம்புழா என்ற பெயரில் ஓடி சாலக்குடி ஆற்றுடன் சேர்ந்து பாண்டியாறு கடலில் கலக்கிறது. இதே போன்று பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் தோன்றும் சிற்றாறுகள் வெள்ளரி ஆறாக மாறி கர்நாடகா சென்று கபினியில் கலக்கிறது.

இந்த இரு ஆறுகளின் நீரை நீலகரி மாவட்டம் தேவாலாவின் இரும்புப்பாலம் பகுதியில் நீர்த்தேக்கம் அமைத்து தடுத்து தேக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேக்கப்படும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளையான மாயாற்றில் கலந்து, பின்னர் பாவனி மூலம் காவிரியில் திருப்பினால் தமிழகத்திற்கு தேவையான நீராதாரம் கிடைக்கும் என்பதே பாண்டியாறு திட்டத்தின் நோக்கம். 50 ஆண்டுகளுக்கு முன்னரே காமராஜர் ஆட்சிக்காலத்தில் இதற்காக போடப்பட்ட திட்டம், பல்வேறு காரணங்களால் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment