ஆசியாவின் 2-வது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி…! 3 நாளில் ரூ.66,681 கோடி இழப்பு..!
3 நாட்களில் மட்டும் கௌதம் அதானி 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்ததையடுத்து, இவர் இந்தியாவிலும், ஆசியாவிலும் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார். மேலும் உலகளாவிய பணக்காரர் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்தார்.
இந்நிலையில் கவுதம் அதானியின் நிறுவனப் பங்குகளில் அதிக முதலீடு செய்திருக்கும் மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை NSDL எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம் முடக்கியதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி வெளியானதிலிருந்து, அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் இவரது நிறுவன பங்குகளின் விலை குறைந்துள்ளது மட்டுமல்லாமல், அதானியின் சொத்து மதிப்பும் சரிந்துள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும் கௌதம் அதானி 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார். இதனால் இவரது சொத்து மதிப்பு 63. 5 பில்லியன் டாலர் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கும், கௌதம் அதானிக்கும் இடையே குறைவான இடைவெளி தான் இருந்தது.
ஆனால் தற்போது அதானியின் சொத்து மதிப்பு சரிந்துள்ளதையடுத்து, இருவருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது. மேலும் இவர் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தையும் இழந்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் இவர் 15-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது, அதானியின் இரண்டாவது இடத்தை சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார்.