கொரோனா எதிரொலி..!சர்வதேச விமானங்களுக்கு மே 31 ஆம் தேதி வரை தடை – டிஜிசிஏ உத்தரவு..!

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக சர்வதேச விமானங்களுக்கு மே 31 ஆம் தேதி வரை தடை விதித்து சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கையானது 3,00,000க்கும் அதிகமாக உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ), வெள்ளிக்கிழமையன்று சர்வதேச விமானங்களுக்கு  தடை விதித்து அதனை மே 31 வரை நீட்டித்துள்ளது.

அதாவது,சர்வதேச பயணிகள் சேவை விமானங்கள் இந்தியாவில் இருந்து செல்ல அல்லது இந்தியாவிற்கு வருவதை தடை விதித்து 2021 மே 31 ஆம் தேதி(2,359 மணிநேர ஐ.எஸ்.டி) வரை நீட்டித்துள்ளது.

ஆனால்,டிஜிசிஏவால் அங்கீகரிக்கப்பட்ட சில குறிப்பிட்ட சர்வதேச வர்த்தக விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும்,மேலும் திட்டமிடப்பட்ட சர்வதேச வர்த்தக விமானங்கள்,அத்தியாவசிய தேவை அடிப்படையில் குறிப்பிட்ட பாதைகளில் அனுமதிக்கப்படலாம் என்றும் விமான ஒழுங்குமுறை அமைப்பு  சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஆனால்,இதற்கு முன்பே அமெரிக்கா,இங்கிலாந்து,குவைத்,பிரான்ஸ்,கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவில் அதிக கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களை தடை செய்துள்ளன. இதனைத்தொடர்ந்து ஈரான்,குவைத்,இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்திய விமானங்கள் மற்றும் பயணிகளுக்கு தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.