“இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு வரை மீன்வளத் துறையில் ரூ.20,050 கோடி முதலீடு செய்யப்படும்!”- பிரதமர் மோடி

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மீன்வளத் துறையில் ரூ.20,050 கோடி முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு,தொடர்ந்து பல திட்டங்களை அமல்படுத்திக்கொண்டே வருகிறது. இந்தநிலையில், பீகார் மாநிலத்தின் மீன் வளம் மற்றும் கால்நடை துறைக்கு பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் மோடி, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மீன்வளத் துறையில் ரூ.20,050 கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று அவர் காணொளி மூலம் கால்நடை மற்றும் மீன்வள தொழிலில் ஈடுபடும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மீன்வளத் துறைக்காக செய்யப்பட்ட முதலீடுகளில் இதுவே அதிகபட்ச தொகை என கூறினார். மேலும், கால்நடை தொடர்பான பிரச்னைகளை பற்றி தெரிந்துகொள்ள, “இ-கோபாலா” என்ற செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.