புயல் வீசிய இரவில் புதிதாகப் பிறந்த 750 குழந்தைகள் – யாஸ் என பெயர் சூட்டும் பெற்றோர்கள்!

யாஸ் புயல் வீசிய இரு தினங்களில் மட்டும் ஒடிசாவின் 10 மாவட்டங்களில் புதிதாக 750 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்க பல இடங்களில் நிலநடுக்கம், புயல், மழை என சில இயற்கை சீற்றங்களாலும் மக்கள் பல்வேறு சேதங்களையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே ஒடிசாவின் பாலசோர் பகுதியில் முழுவதுமாக கரையை கடந்து மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசை குறிப்பாக ஜார்கண்ட் நோக்கி நகர்ந்தது.

இருப்பினும், புயல் கரையைக் கடக்கும் போது ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும்,தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்த யாஸ் புயலால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புயலில் நெருக்கடி நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு சிறப்பான தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நெருக்கடி நேரத்தில் 2100 கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இந்த புயல் வீசிய 2 நாட்களில் மட்டும் 750 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் வீசிய அன்று இரவில் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் யாஸ் என்றும் பெயர் சூட்டி மகிழ்கின்றனர். யாஸ் என்பதற்கு மகிழ்ச்சியான மணமுள்ள மலர்களை கொண்ட மரங்கள் என்றும் பொருள் உள்ளதாம்.

author avatar
Rebekal