7.5% உள் இடஒதுக்கீடு -ஆளுநரின் செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

7.5% உள் இடஒதுக்கீடு  தொடர்பான ஆளுநரின் செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்தார்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு  தொடர்ந்தார்.அவரது வழக்கில்,அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில்  7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம்  கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ,அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டம் எப்போது இயற்றப்பட்டது? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதன் நிலை என்ன என்பது குறித்து ஆளுநரின் செயலர் இன்று பிற்பகலில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.