இணையத்தில் கசிந்த 500 மில்லியன் வாட்ஸ்அப் தரவுகள்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

500 மில்லியன் வாட்ஸ்அப் தரவுகள் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக, அமெரிக்காவின் சைபர்நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றாக, கிட்டத்தட்ட 500 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் கசிந்து விற்பனைக்கு வந்துள்ளன. அமெரிக்காவின் ஊடகமான சைபர்நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, பிரபலமான ஹேக்கிங் தளத்தில், 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை வாட்ஸ்அப் மறுத்துள்ளது. சைபர்நியூஸில் வெளியிடப்பட்ட கூற்று, ஆதாரமற்றது. வாட்ஸ்அப்பில் இருந்து ‘தகவல் கசிவு’ என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, என்று வாட்ஸப்பின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து 32 மில்லியன் பயனர்களின் தரவுகள், எகிப்து, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் இந்தியாவிலிருந்து மில்லியன் கணக்கான பயனர்களின் தரவுகள் இந்த தொகுப்பில் இருப்பதாக தரவுகளை விற்பனைக்கு வைத்த நபர், கூறியுள்ளார்.

சைபர்நியூஸின் அறிக்கையின்படி, அமெரிக்க தரவுத்தொகுப்பு $7,000க்கும்,  இங்கிலாந்து தரவுத்தொகுப்பு $2,500 க்கும் கிடைக்கிறது. சைபர்நியூஸிலிருந்து, விற்பனையாளரைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் 1,097 இங்கிலாந்து நாட்டின் மொபைல் எண்களை  ஆதாரமாக பகிர்ந்துள்ளார். ஆராய்ந்து பார்த்த பிறகு அவை வாட்ஸ்அப் கணக்குகளிலிருந்து வந்தவை என்பதை சைபர்நியூஸ் உறுதிப்படுத்தியது.

இருப்பினும் ஹேக்கர், தாங்கள் எவ்வாறு தரவைப் பெற்றார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. இத்தகைய தகவல்கள் பெரும்பாலும் சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பயனருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புவது மற்றும் ஒரு இணைப்பைக் கிளிக் செய்யும்படி கேட்கும். அதன்பிறகு, பயனர் தனது கிரெடிட் கார்டு அல்லது பிற தனிப்பட்ட விவரங்களை வழங்குமாறு கேட்கும்.

தரவுகள் கசிவது மெட்டா நிறுவனத்திற்கு இது முதல் முறை அல்ல, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 6 மில்லியன் தரவுகள், உட்பட 500 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் தொலைபேசி எண்கள் மற்றும் பிற விவரங்கள் இருந்தன.

author avatar
Muthu Kumar

Leave a Comment