டெல்டாவில் இருந்து 5 லட்சம் விவசாயிகள் வெளியேறி உள்ளனர்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: காவிரி டெல்டாவை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்துள்ளதை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு காவிரிநீரை தமிழகத்துக்கு பெற்று தரவில்லை. இங்கிருந்து 5 லட்சம் விவசாயிகள் வெளியேறிவிட்டனர். வறட்சியால் விவசாய கிராமங்கள் முடங்கிவிட்டன. தற்போது மாதிரிமங்கலத்தில் எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டு ஏ சேனல் வாய்க்கால் முழுவதும் எண்ணெய் கழிவாக உள்ளது. அதில் துர்நாற்றம் தான் அதிகமாக வீசுகிறது.

நாளை நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் விவசாயம் தவிர ரசாயனம், பெட்ரோலியம் உள்ளிட்ட தொழில்களுக்கு எங்கள் கிராமங்களில் நிலம் கொடுக்க மாட்டோம் என்று தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் காவிரிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி என்று பிரதமரிடம் பேசுவதற்கே அச்சப்படுவது வேதனையளிக்கிறது.

காவிரி விவசாயிகளின் உரிமைகளை பெற்று தருவதற்கு பிரதமரை வலியுறுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளை ஒன்றுப்படுத்தி வரும் 29ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் வெற்றிபெறும் வகையில் பிரசார பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்காக 45 வருவாய் கிராமங்களில் 47,000 ஏக்கர் நிலங்களை அபகரிக்கவுள்ளனர். இந்த செயல் பேராபத்தை விளைவிக்கும். இதனால் மரம், செடி,
பயிர்கள் கருகிவிடும். இந்த மண்ணில் எண்ணெய் எடுக்க வந்தால் இனிமேல் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார். 

author avatar
Castro Murugan

Leave a Comment