5 மாவட்டங்களில் கனமழை தொடரும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தென் மேற்கு பருவமழை கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் பெய்து வருகிறது.

பருவமழை தீவிரம் அடைந்து கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த 5 மாவட்டங்களில் கனமழை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மற்ற இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக் கல்லாரில் (கோவை) 10 செ.மீ., தேவலா (நீலகிரி) வால்பாறை, பெரியார் (தேனி) ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழையும், நீலகிரியின் கேபிரிட்ஜ், நடுவட்டத்தில் 3 செ.மீ., கோத்தகிரி, கேத்தி, குன்னூரில் 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் அலை 3.5 மீ முதல் 3.7 மீ. உயரம் வரை வீசும் என்பதால் தென் கடலோர மாவட்ட மீனவர்கள் மட்டுமின்றி, வடகடலோர மாவட்ட மீனவர்களும் வங்ககடல், அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment