ட்விட்டரை வாங்க 43 பில்லியன் டாலர் – இறுதி ஆஃபர் கொடுத்த எலோன் மஸ்க்!

ட்விட்டரை 43 பில்லியன் டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் இறுதி ஆஃபர்.

உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியிருந்தார். இதனால், தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டபோது, மஸ்க் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லருக்கு எழுதிய கடிதத்தில், ட்விட்டரை 43 பில்லியன் டாலருக்கு ( கிட்டத்தட்ட 3 லட்சம் கோடிக்கு மேல்) நானே வாங்கிக்கொள்கிறேன் என்றும் இதுதான் தனது சிறந்த மற்றும் இறுதி சலுகை எனவும் தெரிவித்துள்ளார். 9% பங்குகளுடன் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் மஸ்க், இறுதி ஆஃபரை ஏற்காவிட்டால் நான் ஒரு பங்குதாரராக எனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அந்த கடிதத்தில் ட்விட்டருக்கு அசாதாரண ஆற்றல் உள்ளது. நான் அதைத் திறக்கிறேன் என்று கூறியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால் சந்தையில் ட்விட்டரின் பங்குகள் 12 சதவீதம் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.