ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்..!

குஜராத்தில் உள்ள ஒரு மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்

குஜராத் வதோதராவின் மகர்புரா மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பாய்லர் இன்று காலை திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதன் காரணமாக சுமார் அரை முதல் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பாய்லர் அருகே தொழிலாளர்கள் வீடு கட்டியிருந்தனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாய்லர் வெடித்ததில் ஒரு 30 வயதுடைய பெண் மற்றும் 4 வயது சிறுமி உட்பட  நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

மகர்புரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சஜித் பலோச் கூறுகையில், அப்பகுதியில் 9:30 மணியளவில் பலத்த வெடிப்பு ஏற்பட்டது. 15 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் இங்கு பணிபுரியும் ஊழியர்களும், சம்பவம் நடந்தபோது  அவ்வழியாகச் சென்றவர்களும் அடங்குவார்கள் என தெரிவித்தார்.

தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக  கூறினார். மத்திய குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ரசாயன நிறுவனத்தில் சமீபத்தில் நடந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan