37 வது தேசிய விளையாட்டுப் போட்டி..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 26ம் தேதி) மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு செல்கிறார். பிற்பகல் மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, கோயிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்வார். பிறகு ஷீரடியில் உள்ள புதிய தரிசன வரிசை வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

இந்த புதிய தரிசன வரிசை வளாகத்திற்கு கடந்த 2018 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த தரிசன வரிசை வளாகம் பக்தர்களுக்கு வசதியான காத்திருப்புப் பகுதிகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன கட்டிடமாகும். இது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அமரும் வசதி கொண்ட பல காத்திருப்பு அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆடை அறைகள், கழிப்பறைகள், முன்பதிவு கவுன்டர்கள், பிரசாத கவுண்டர்கள், தகவல் மையம் போன்றவை உள்ளன. இதனையடுத்து ஷீரடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதனையடுத்து நாளை மாலை கோவா சென்றடையும் பிரதமர், அங்கு மார்கோவில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களிடமும் அவர் உரையாற்றுவார்.

தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் முதன்முறையாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் அக்டோபர் 26 முதல் நவம்பர் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்,  28 மைதானங்களில் 43 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்று போட்டியிடவுள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.