நிறுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சத்தம்.. பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ் – இஸ்ரேல்.!

பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் , இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த ஒரு மதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1400 பேரும், ஹமாஸ் தரப்பில் காசா நகரில் சுமார் 15000 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசா நகரில் நிலவும் போர் காரணமாக உயிர்சேதங்களில் பெண்கள், குழந்தைகள் அதிகமானோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்சேதம் அதிகமாவதை கண்டு உலக நாடுகள் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை தொடர்ந்து வலியுறுத்தியது.

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.! 30 பேர் உயிரிழப்பு, 100 பேர் காயம்.!

அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தலம் செய்தன. இதனை தொடர்ந்து, 4 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது. பிணை கைதிகளை விடுவிப்பதாக இருந்தால் 4 நாள் போர் நிறுத்தம் என்றும், பிணை கைதிகள் கூடுதலாக விடுவிக்கப்பட்டால் போர் நிறுத்த நாட்கள் நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் என இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று முதற்கட்டமாக 24 பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. 10 தாய்லாந்து நாட்டை சேர்ந்த பிணை கைதிகள், ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பிணை கைதி, 9 பெண்கள் , 4 குழந்தைகள் உட்பட 13 இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிணை கைதிகள் என 24 பிணை கைதிகள் நேற்று காசா – எகிப்து எல்லையில் விடுவிக்கப்பட்டனர்.

அதே போல, இஸ்ரேல் ராணுவ  கட்டுப்பாட்டில் இருந்த 7 ஆயிரம் பிணை கைதிகளில், 24 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 39 பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த 3 நாட்களுக்கு 150 பிணை கைதிகளை விடுவிப்பதாக இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்துள்ளது.

4 நாள் போர் நிறுத்தத்தை தொடர்ந்து வெடிகுண்டு சத்தங்கள் இல்லாமல் காசா நகரத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். இதே நிலை தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.