ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது!

Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இரண்டு பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் ஓட்டல் அருகே குண்டு வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. அதை வைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதேசமயம் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையில், ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பெங்களூரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் குற்றவாளியுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும் என்ஏஐ கூறியிருந்தது. அதுமட்டுமில்லாமல், ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

அவர்கள் இருவரும் சென்னையில் தங்கி இருந்ததாகவும், பின்னர் வேறு இடத்துக்கு சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் தலைமறைவாக இருந்த முசாவீர் ஹுசைன் ஷாஸேப் மற்றும் அத்புல் மதீன் தாஹா ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகளை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா அருகே தலைமறைவாக பதுங்கியிருந்த அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அதில் முசாவீர் ஹுசைன் ஷாஸேப்  ராமேஸ்வரம் கஃபேவில் IED வகை குண்டை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் அத்புல் மதீன் தாஹா குண்டுவெடிப்பு சம்பவத்தை செயல்படுத்துதல் மற்றும் திட்டமிடுதல் ஆகியவற்றின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் எனவும் என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே, வெடிகுண்டு சம்பவ வழக்கில் முஸாமில் ஷெரீஃப் என்பவர் கடந்த மார்ச் 27ல் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேற்குவங்கத்தில் மேலும் இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்